×

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை பக்தர் மூச்சுத்திணறி பலி: 1 மாதத்தில் 6 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி

தொண்டாமுத்தூர்: கோவையில் வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை பக்தர் மூச்சுத்திணறி பலியானார். இந்த மாதத்தில் இது 6வது பலி என்பதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ரகுராம் (50). கம்பெனிகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் நிறுவன உரிமையாளர். இவரது மனைவி ஷீலா (45). மகள் வர்ஷினி (22). ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ள ரகுராம் அடிக்கடி கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு வந்து சிவனை தரிசனம் செய்துள்ளார்.

அதன்படி தனது நண்பர்கள் 15 பேருடன் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கோவை வந்தார். மாலை 6 மணிக்கு மலை ஏறினார். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் 5வது மலை ஏறியபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரகுராம் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்றவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் ஏற்பாட்டின்படி டோலி மூலம் ரகுராமை அதிகாலை 4 மணிக்கு மலை அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரகுராமை சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராகுராமின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை விரைந்தனர். விசாரணையில் ரகுராமுக்கு நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெள்ளிங்கிரி மலை ஏறிய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தற்போது மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த 1 மாதத்தில் இது வரை 6 பேர் பலியானது சோகத்தையும், பக்தர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பலவீனமானவர்கள் மலையேற வேண்டாம் என்று வனத்துறையினர் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை பக்தர் மூச்சுத்திணறி பலி: 1 மாதத்தில் 6 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vellingiri hill ,Coimbatore ,Thondamuthur ,Raghuram ,Mukkaper, Chennai ,Sheela ,
× RELATED கடும் குளிர், மழையிலும் வெள்ளிங்கிரி மலையில் பக்தர்கள் குவிந்தனர்